search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவை வனக்கோட்டம்"

    கோவை வனக்கோட்டத்தில் உள்ள வனவிலங்குகளை கண்காணிக்க ஆளில்லாத குட்டி விமானம் கோவை வந்தது. அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்து இதை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
    கோவை:

    கோவை வனக்கோட்டத்தில் கோவை, மதுக்கரை, போளுவாம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை ஆகிய 7 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உட்பட்ட வனப்பகுதியில் காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைப்புலிகள், காட்டெருமைகள் உள்பட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.

    இதில் வனப்பகுதியை விட்டு வெளியே வரும் காட்டு யானைகள், மலையடிவார பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. அவற்றை தடுக்க அகழி வெட்டப்பட்டாலும், ஆழம் குறைந்த பகுதி வழியாக காட்டு யானைகள் அகழியை கடந்து வனப்பகுதியை விட்டு வெளியே வந்து விடுகின்றன.

    அவற்றை கண்காணித்து மீண்டும் வனப்பகுதிக்குள் துரத்தும் பணியில் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் ஈடுபட்டு வந்தாலும், சில நேரங்களில் யானை- மனித மோதல் நடந்து வருகிறது. இதனால் மலையடிவார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள்.

    காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்தாலும், அவற்றை மீண்டும் வனப்பகுதிக்குள் துரத்தும்போது, அவைகள் வனப்பகுதிக்குள் சென்று விட்டதா அல்லது அவை எங்கு நிற்கின்றன என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. அத்துடன் வனப்பகுதிக்குள் எந்த இடங்களில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது என்பதையும் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.

    எனவே காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் துரத்துவதற்காகவும், வனவிலங்குகளை கண்காணிப்பதற்காகவும் ஆளில்லாத குட்டி விமானம் வேண்டும் என்று வனத்துறை சார்பில் உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதப்பட்டது. தற்போது அதற்கான அனுமதி அளித்து, ஆளில்லாத குட்டி விமானமும் கோவை வந்துள்ளது.

    இதை இயக்க அதிகாரிகள் யாரை நியமிப்பது? என்பது குறித்து உயர் அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகிறார்கள். அதன் பின்னர் அதை பயன்படுத்து வது எப்படி? என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி அளிக்கப்பட்ட பின்னர் அந்த ஆளில்லாத குட்டி விமானத்தை பயன்படுத்த அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    கோவைக்கு கொடுக்கப்பட்டு உள்ள ஆளில்லாத குட்டி விமானத்தில் பல்வேறு வசதிகள் உள்ளன. வீடியோ பதிவு செய்வதுடன், புகைப்படமும் எடுக்கும். அதுபோன்று அதில் தேனீக்கள் போன்று சத்தம் எழுப்பும் வசதியும் உள்ளது. பெரும்பாலும் தேனீக்களின் சத்தம் கேட்டதும் காட்டு யானைகள் ஓடிவிடும்.

    வனப்பகுதிக்கு மேல் இந்த குட்டி விமானத்தை இயக்கி, கண்காணிக்கும்போது, வனப்பகுதிக்குள் சட்டவிரோதமாக யாராவது நடமாடுகிறார்களா? என்பதையும் கண்காணிக்க முடியும். அத்துடன் எந்தெந்த பகுதிகளில், எந்தெந்த வகையான வனவிலங்குகள் இருக்கின்றது என்பது குறித்தும் தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்.

    இந்த ஆளில்லாத குட்டி விமானத்தை இயக்க பயிற்சி அளித்த பின்னர், அதன் பயன்பாடு குறித்து பரிசோதனை செய்யப்படும். இந்த ஆளில்லாத குட்டி விமானம் வித்தியாசமானதாக, எடை அதிகம் கொண்டதாக இருக்கிறது. எனவே வனப்பகுதியை விட்டு வெளியே வந்து தொந்தரவு செய்யும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் துரத்த மிகவும் உதவியாக இருக்கும். அதுபோன்று அந்த காட்டு யானைகள் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று விட்டதா? அல்லது வன எல்லையில்தான் நிற்கிறதா? என்பது குறித்தும் அறிய முடியும்.

    மேலும் இதை வனப்பகுதிக்கு மேல் இயக்கும்போது, வனப்பகுதிக்குள் காயத்துடன் ஏதாவது வனவிலங்குகள் சுற்றுகிறதா? என்பதையும் உடனடியாக கண்டறிய முடியும். எந்தப்பகுதியில் வனவிலங்குகளின் தொந்தரவு இருக்கிறதோ அங்கு உடனடியாக ஆளில்லாத குட்டி விமானத்தை எடுத்துச்சென்று கண்காணிக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்
    ×